வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகல்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்காளதேசம் இழந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

டாக்கா,

நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடைசி போட்டி முடிவடைந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகுவதாக ட்அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "நான் வங்காளதேச அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்த வடிவத்தில் நான் கேப்டனாக தொடர விரும்பவில்லை. மேலும் அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்க விரும்புகிறேன். இது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல. முற்றிலும் அணியின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். இது அணிக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

மூன்று வடிவங்களுக்கும் மூன்று கேப்டன்கள் இருப்பது சரியானது என்று நான் நினைக்கவில்லை. இது முற்றிலும் எனது தனிப்பட்ட கருத்து. கிரிக்கெட் வாரியம் வேறுவிதமாக நினைக்கலாம், அதை நான் முழுமையாக மதிக்கிறேன். என் பார்வையில், மூன்று கேப்டன்கள் இருப்பது அணிக்கு கடினமாக இருக்கும். எனவே, அணியின் நலனுக்காக, நான் பதவி விலகுகிறேன்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com