

கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதியது.
அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டி கொல்கத்தா வீரர் நரைனுக்கு 200வது போட்டியாகும். இதனால் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை நரைன் படைத்தார். பொல்லார்டு - 189, டிவில்லியர்ஸ் - 184, வார்னர் - 184 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.