இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: டிவில்லியர்ஸ் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் நடத்தியிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கேப்டவுன்,

சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. செஞ்சூரியனில் நடந்த தொடக்க டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வரலாறு படைத்தது.

இந்த நிலையில் சிறப்புமிக்க இந்த தொடரில் 3-வது டெஸ்ட் நடத்தியிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான 39 வயதான டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். தனது யூடியுப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் அதிக அளவில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் மீது தான் பழிசுமத்தியாக வேண்டும். யாரை குறை சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறு இருப்பதாக உணர்கிறேன். அனைத்து அணிகளும் தங்களுக்குள் மோதி அதில் உலகின் சிறந்த டெஸ்ட் அணி எது என்பதை பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தற்போதைய நடைமுறையில் சில மாற்றங்களை செய்தாக வேண்டும்.

சொந்த மண்ணில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்காக தென்ஆப்பிரிக்கா, முன்னணி வீரர்கள் இல்லாத ஒரு அணியை டெஸ்ட் போட்டியில் விளையாட நியூசிலாந்துக்கு அனுப்புவது உலக கிரிக்கெட் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் ஆபத்தான நிலையில் இருப்பதை நமக்கு காட்டுகிறது. 50 ஓவர் போட்டி நிலைமை கூட இது தான். ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் செயல்பாடும் இப்போது 20 ஓவர் கிரிக்கெட்டை சுற்றியே இருக்கிறது. 20 ஓவர் லீக் போட்டிகளின் மூலம் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான சம்பளம் கிடைக்கிறது. வீரர்கள் தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைப்பதால், அவர்களை குறை சொல்வதற்கும் எதுவும் இல்லை.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் நடந்த கேப்டவுன் ஆடுகளத்தை பொறுத்தவரை, முதல் நாளில் முதல் பகுதியை (மதிய உணவு இடைவேளை வரை) சமாளித்து விட்டால், அதன் பிறகு பேட்டிங் செய்வது எளிதாகி விடும். வீரர்கள் தங்களின் வழக்கமான ஷாட்டுகளை அடிக்கும் போது, இங்கு நன்றாக செயல்பட்டு உள்ளனர். பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) இந்த மைதானத்தில் இரட்டை சதம் விளாசியதை நினைவுப்படுத்துகிறேன். நானும் சில சதங்களை அடித்துள்ளேன். இத்தகைய ஆடுகளத்தில் வெரோன் பிலாண்டர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரபடா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ச்சியாக ஆப்-ஸ்டம்பை குறிவைத்து வீசுவதை பேட்ஸ்மேன்கள் அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் பவுலர்களின் ஆதிக்கம் ஓங்கி விடும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com