

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்பிளே தற்போது செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்பிளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு முடிவுக்கு வருகிறது. இதன்பிறகு, மீண்டும் அனில் கும்பிளேவை தலைமை பயிற்சியாளராக தானாக பதவி நீட்டிப்பு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்ட வில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
அனில் கும்பிளே மீது அதிருப்தியில் இருப்பதால், பயிற்சியாளர் பதவிக்கு புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் இந்த பணிக்கான நேர்முகத்தேர்வை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அனில் கும்பிளே தானாக மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அனில் கும்பிளே நேர்முகத்தேர்வுக்கு நேரடியாக அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், வீரர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் தனக்கான ஊதிய உயர்வு பற்றி மிகவும் ஆக்ரோஷமான முறையில் பிசிசிஐயிடம் முறையிட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீது அதிருப்தி அடைந்திருக்க கூடும் என தெரிகிறது. அனில் கும்பிளே பயிற்சியாளராக பணியாற்றி வரும் காலத்தில் இந்திய அணி உள்ளூரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அனில் கும்பிளே பதவிக்காலத்தில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.