

கொழும்பு,
இலங்கை அணி சமீப காலமாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தாரை வார்த்த இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், இலங்கை அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இலங்கை அணியின் மோசமான ஆட்டத்துக்கு பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு ராஜினாமா செய்துள்ளது. இதற்கிடையில், இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இலங்கை இந்தியா இடையேயான 4-வது ஒருநாள் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் கபுகேதரா விலகியுள்ளார். கபுகேதராவுக்கு பதிலாக பொறுப்பு கேப்டனாக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறீயதாவது:-தற்போதைய நிலையில், நாங்கள் சில போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளோம். ஆனாலும், இன்னும் எங்களிடம் இளம் வீரர்களும் அனுபவம் மிக்க வீரர்களும் உள்ளதாக நான் நினைக்கிறேன்.
தற்போது, நாங்கள் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக நின்று நம்பிக்கை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். சர்வதேச போட்டிகளில் ஆடும் திறனுடன் நாங்கள் உள்ளோம். நாங்கள் பட்டியலில் முதல் நிலையில் இல்லை என்று மக்கள் நினைக்கின்றனர். இதை மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். இலங்கை அணி மீது அழுத்தம் இருப்பதாக நான் கருதவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.