ராகுல் - சஞ்சீவ் கோயங்கா இடையே எந்த பிரச்சினையும் இல்லை - லக்னோ உதவி பயிற்சியாளர் லான்ஸ் க்ளூசனர்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
Published on

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டன. இந்த தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, தங்களது அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்கிற வாய்ப்பில் இருக்கிறது.

அதுவும் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து அமையும். இந்த நிலையில் அந்த அணியின் உரிமையாளருக்கும் (சஞ்சீவ் கோயங்கா) , கேப்டனுக்கும் (கே.எல்.ராகுல்) இடையே நடந்த வாக்குவாதம் பற்றி, அந்த அணியின் உதவி பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இரண்டு கிரிக்கெட் பிரியர்களிடையே நடந்த வலுவான விவாதத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு டீ கப்பில் ஏற்பட்ட புயல்தான். மேலும் நாங்கள் இப்படியான வலுவான விவாதத்தை விரும்புகிறோம். அணி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனால் இது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை கிடையாது.

கே.எல்.ராகுல் தனக்கே உரிய ஒரு பாணியை வைத்திருக்கிறார். இது அவரை ஒரு தனித்துவமான வீரராகவும் உலகம் முழுவதும் மரியாதைக்குரியவராகவும் வைத்திருக்கிறது. ஆனால் விதிவிலக்காக இந்த ஐ.பி.எல் தொடர் அவருக்கு கடினமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்திருக்கிறோம்.

இதனால் அவர் எப்பொழுதும் இன்னிங்ஸை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருந்திருக்கிறார். அவரைச் சுற்றி நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக அவருக்கு கடினமான சூழ்நிலை அமைந்து விட்டது. நாங்கள் கடினமான நேரங்களில் விக்கெட்டை இழந்து கொண்டிருக்கிறோம். மேலும் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் கடந்த 8ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி நிர்ணயித்த 166 ரன் இலக்கை ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டியது.

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பின் மைதானத்திற்குள் வந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முன்னாள் வீரர்கள் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. மேலும் கே.எல்.ராகுல் அணியில் தொடர மாட்டார் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com