சதத்தை நழுவ விட்டதற்காக வருத்தப்படவில்லை - சாய் சுதர்சன்

Image Courtesy: @BCCI
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினார். நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இப்போட்டியில் தமது முதல் சதத்தை நழுவ விட்டதற்காக வருத்தப்படவில்லை என்று சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னுடைய ஆட்டம் நல்ல பங்களிப்பாக இருந்தது. ஜெய்ஸ்வாலுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. நான் ரன்கள் அடிப்பதைப் பற்றி நினைக்காமல் கொஞ்சம் சுதந்திரமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். நான் விஷயங்களை நடக்கச் செய்யாமல் விஷயங்கள் நடப்பதற்காக கொஞ்சம் நேரத்தைக் கொடுக்க முயற்சித்தேன்.
இன்று கிடைத்த ரன்களுக்காக நன்றியுடையவனாக உள்ளேன். ஆனால் சதத்தை அடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை நோக்கியுள்ளேன். ஜெய்ஸ்வால் ஆட்டத்தை எதிர்புறம் பார்த்தது திரில்லாக அமைந்தது. நிறைய சுவாரசியமான ஷாட்டுகளை அடித்த அவர் நல்ல பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினார்.
அவர் எம்மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எனக்குக் கொடுத்தார். எங்களுக்குள் போட்டியில்லை. இருப்பினும் நல்ல பந்துகளை ரன்களாக மாற்றுவதற்கு எம்மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிட்ச் நாளை சுழலுக்கு சாதகமாக மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.






