தோனி மட்டுமல்ல.. கபில்தேவ், பிஷன் சிங் பேடியும் நிறைய வீரர்களின் கெரியரை... - யோக்ராஜ் சிங் கடும் தாக்கு


தோனி மட்டுமல்ல.. கபில்தேவ், பிஷன் சிங் பேடியும் நிறைய வீரர்களின் கெரியரை... - யோக்ராஜ் சிங் கடும் தாக்கு
x
தினத்தந்தி 5 Sept 2025 5:29 PM IST (Updated: 5 Sept 2025 5:32 PM IST)
t-max-icont-min-icon

தோனி தனக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்ததாக இர்பான் பதான் விமர்சித்த வீடியோ வைரலானது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

முன்னதாக அவர் கேப்டனாக இருந்த சமயத்தில் கம்பீர், ஹர்பஜன், சேவாக், இர்பான் பதான் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்ட அவர் விராட் கோலி, தவான், ரோகித், அஸ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து சென்றார். அவரது அந்த முடிவால்தான் இந்திய அணி மற்ற நாடுகளை போல் அல்லாமல் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றாலும் தடுமாறாமல் தொடர்ந்து அசத்தி வருகிறது.

அதே சமயம் தங்களது கெரியரின் இறுதி கட்டத்தில் தோனி வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்டதாக சேவாக், கம்பீர், இர்பான் பதான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். அந்த வரிசையில் தோனி தமக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்ததாக இர்பான் பதான் 5 வருடங்களுக்கு முன்பாக விமர்சித்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் தோனி மட்டுமல்ல கபில் தேவ், பிஷன் சிங் பேடி ஆகியோரும் தங்களுக்கு சாதகமான வீரர்களை தேர்ந்தெடுத்து பல இந்திய வீரர்களின் கெரியரை அழித்ததாக முன்னாள் வீரர் யோக்ராக் சிங் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இர்பான் பதான் மட்டுமல்ல. கவுதம் கம்பீர் இதைப் பற்றி பேசுவதைப் பார்க்கிறீர்கள். வீரேந்தர் சேவாக் இதை வெளிப்படையாகக் கூறினார். ஹர்பஜன் சிங், தான் எப்படி ஒரு ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என பேசினார். தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பதை அறிய ஒரு நடுவர் குழு அமைக்க வேண்டும்.ஏனெனில் எம்.எஸ். தோனி அதற்கான பதிலை சொல்ல விரும்ப மாட்டார். பதில் சொல்ல விரும்பாதவனுக்கு குற்ற உணர்வு இருக்கிறது.

நான் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், எம்.எஸ். தோனி ஆகியோரைப் பற்றி பேசுகிறேன். நான் உடன் இருந்தவர்களைப் பற்றித்தான் பேச முடியும். அவர்கள் வீரர்களை மோசமாக நடத்தினார்கள். தவறு தவறுதான். இரண்டு தவறுகள் ஒரு சரியை உருவாக்க முடியாது. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், நமது கிரிக்கெட் வீரர்களும் அணியும் நமது கேப்டன்களால் அழிக்கப்பட்டன” என்று கூறினார்.

1 More update

Next Story