கடந்த 2 போட்டிகளாக எதுவும் எங்களது வழியில் செல்லவில்லை - கம்மின்ஸ்

Image Courtesy: @IPL / @SunRisers
நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை என ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
விசாகப்பட்டினம்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சியாஷன் அன்சாரி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். ஆனால், நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என்று நினைக்கவில்லை. கடந்த 2 போட்டிகளாகவே அனைத்தும் எங்களது வழியில் செல்லவில்லை. ஓரிரு விஷயங்களை மாற்றினால் முடிவுகள் மாறும். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார்.
அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார். மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






