ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆஸி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

மெக்காய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 431 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் (142 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (100 ரன்கள்), கேமரூன் கிரீன் (118 ரன்கள்) ஆகியோர் சதமும், அலெக்ஸ் கேரி அரைசதமும் (50 ரன்கள்) அடித்தனர்.

பின்னர் 432 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 24.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற மாபெரும் சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்தியாவின் அந்த சாதனையை தகர்த்துள்ள ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:

1. ஆஸ்திரேலியா - 276 ரன்கள்

2. இந்தியா - 243 ரன்கள்

3. பாகிஸ்தான் - 182 ரன்கள்

4. இலங்கை - 180 ரன்கள்

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கூப்பர் கனோலி 5 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் மற்றும் சீன் அபோட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com