ஒருநாள் கிரிக்கெட்; கசன்பர் அபார பந்துவீச்சு...வங்காளதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Image Courtesy : @ACBofficials
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்லா கசன்பர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியினர் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷாண்டோ 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்லா கசன்பர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.






