ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.க்கு எதிராக சச்சினின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

image courtesy: BCCI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார்.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா விளாசிய 9-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் (9 சதம்) சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். இந்த பட்டியலில் விராட் கோலி 8 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.






