இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேன் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன் லபுஸ்சேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேன் சேர்ப்பு
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் ஜனவரி 14-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 17-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் 19-ந் தேதியும் நடக்கிறது.

இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான லபுஸ்சேன் கடைசியாக நடந்த 3 டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சதம் அடித்து சாதனை படைத்தார். இதனால் அவர் முதல்முறையாக ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஆல்-ரவுண்டர் சீன் அப்போட் அணிக்கு திரும்பி இருக்கிறார். மன அழுத்த பிரச்சினையில் சிக்கிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் மற்றும் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

வீரர்கள் தேர்வு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் டிரோவர் ஹான்ஸ் கருத்து தெரிவிக்கையில், பிக்பாஷ் லீக் போட்டிக்கு மேக்ஸ்வெல் திரும்பி இருப்பது சிறப்பானதாகும். அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனிக்க இருக்கிறோம். இந்திய ரசிகர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோரின் ஆட்டத்தை காண ஆர்வமாக இருக்கிறார்கள். லபுஸ்சேன் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார். குறுகிய வடிவிலான போட்டிகளில் எங்கள் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அடுத்து வரும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டி வரை எங்களது உத்வேகத்தை தொடர முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

இந்திய பயணத்தின் போது தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியினருடன் செல்லமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக உதவி பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு பயணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், லபுஸ்சேன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com