2 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்... 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா

17 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்தது.
உலகக் கோப்பையை
Published on

சென்னை,

இன்றைய நாளில் சரியாக 2 ஆண்டுகளுக்கு முன், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

வரலாறு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பொற்கால தருணம் இன்றைய நாளில் அரங்கேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 17 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி

பார்படாஸில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலியின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா, ஒரு கட்டத்தில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு போட்டியின் போக்கையே மாற்றினர்.

தென் ஆப்பிரிக்காவை 20 ஓவர்களில் 169/8 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குறிப்பாக மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்தது இந்தியா உலக சாம்பியன் ஆக முக்கிய காரணமாக அமைந்தது.

17 ஆண்டுகள் கழித்து

இந்த வெற்றியின் மூலம், 2007-ல் மகேந்திர சிங் தோனி தலைமையில் முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா, 17 ஆண்டுகள் கழித்து தனது 2-வது டி20 உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத நினைவாக, 2024 ஜூன் 29-ம் தேதி கிடைத்த இந்த உலகக்கோப்பை வெற்றி இன்று வரை வரலாற்று சிறப்புமிக்க தருணமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com