ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

கார்டிப்பில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா அணியை 38 ரன்கள் விழ்த்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
Published on

கார்டிப்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. 5-வது சதத்தை பூர்த்தி செய்த ஜாசன் ராய் 120 ரன்களும் (108 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஸ் பட்லர் 91 ரன்களும் (70 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக 333 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

பின்னர் 343 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131 ரன்களும், அகார் 46 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் லியாம் பிளங்கீட் 4 விக்கெட்களும், அடில் ரஷித் 3 விக்கெட்களும், மோயின் அலி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது வென்றார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com