

மிர்புர்,
3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசம் சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விரு அணிகளும் நேரடி ஒருநாள் போட்டி தொடரில் மோதுவது இதுவே முதல்முறையாகும். ஜோஷ் இங்லிஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த (1-2) கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது. அந்த அணியில் மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட், ஆடம் ஜம்பா உள்ளிட்ட சிறந்த வீரர் கள் இடம் பிடித்துள்ளனர். கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் இந்த தொடரில் ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பாகும்.
வங்காளதேச அணியில் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டான் தாஸ், தவ்ஹித் ஹிரிடாய், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, நஹித் ராணா, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகிய சிறந்த வீரர்கள் அங் கம் வகிக்கின்றனர். வங்காளதேச அணி உள்ளூரில் அரங்கேறிய கடைசி 4 ஒருநாள் போட்டி தொடர்களில் (இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. அந்த வெற்றிப்பயணத்தை தொடர தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக 22 ஒருநாள் போட்டி களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.