

லாகூர்,
பாகிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.17, 19, 21) மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் (செப்.25, 26, 29, அக்.1, 3) விளையாடுகிறது.
இதற்காக, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் குண்டு துளைக்காத பஸ்சில் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்ததும் பயிற்சி மேற்கொள்கின்றனர். பாகிஸ்தான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் லாதம் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியினருடன் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சமரவீராவும் சென்றுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் சமரவீராவுக்கு இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது.
இந்த நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல்லுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் அவருக்கு மருத்துவர் நிஷில் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டெல் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டு உள்ளார்.