2 போட்டிகள் மட்டுமே மீதம்... இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் வெல்லப்போவது யார்..? சுரேஷ் ரெய்னா கணிப்பு

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
எஞ்சியுள்ள் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும். அதேவேளை எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வெல்ல முடியும். இதனால் இந்த தொடர் மிகுந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
எனினும் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே பல தரப்பினர் கூறி வருகின்றனர். இங்கிலாந்து 4-வது போட்டியின் முடிவிலேயே தொடரை கைப்பற்றும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் (இந்திய அணி) அதை செய்வார்கள் (தொடரை வெல்வார்கள்). அவர்களிடம் அந்த ஆசை, விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாடு உள்ளது. ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு கேப்டனாகவும் சுப்மன் கில் தனது முத்திரையைப் பதிப்பார். அவர் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.






