

டோக்கியோ,
ஐப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியின் கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பரம எதிரி யான பாகிஸ்தானை எதிர்கொண்டது.
'டாஸ்' போடும் நிகழ்வின் போது இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சகிப்சதா பர்ஹான் கைகுலுக்கி கொள்ளவில்லை. அதேபோல் வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கு வதை தவிர்த்தனர். 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி
20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தக்கவைத்தது.
வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்வேன். ஏனென்றால் நாங்கள் ஜப்பான் வந்த நாளிலிருந்து இடைவிடாமல் கனமழை பெய்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் எங்களால் பயிற்சி செய்ய முடியவில்லை. ஆனால் வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொண்ட விதமும், அங்கேயே கிடைத்த இடங்களில் தொடர்ந்து பயிற்சி செய்த விதமும் சிறப்பாக இருந்தது. நாங்கள் புகார் சொல்லவில்லை. எந்தக் காரணத்தையும் கூறவில்லை. அதுவே ஒரு சாம்பியன் அணிக்கான அடையாளம். இன்று நடந்ததும் அதற்கான ஒரு பிரதிபலிப்புதான்.என தெரிவித்துள்ளார்.