அரையிறுதியில் தோல்வி: இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்

படுதோல்வி அடைந்த இந்திய அணியை ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
Image Courtesy: AFP/ Twitter BCCI
Image Courtesy: AFP/ Twitter BCCI
Published on

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், "எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0" என பதிவிட்டுள்ளார்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதே போல கடந்த 2021 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சேஸிங்கின் போது ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் தோல்வி அடைந்ததை குறிப்பிடும் விதமாகவே அவர் "152/0 vs 170/0" என பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரண்டு அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்ட முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com