‘பாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி

பாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
‘பாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று தொடங்குவதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாண்ட்யா, லோகேஷ் ராகுலின் சர்ச்சைக்குரிய விவாதம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் பார்வையில், மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு தகாத கருத்துகளை நிச்சயம் ஆதரிக்கமாட்டோம். பாண்ட்யாவும், ராகுலும் தங்களது தவறை உணர்ந்து இருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பிரச்சினையாகி விட்டது என்பதையும் புரிந்து கொண்டுள்ளனர். இது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட கருத்து. இது மாதிரியான முறையற்ற கருத்துகளுக்கு ஒரு போதும் ஆதரவு கரம் நீட்டமாட்டோம் என்று அவர்களிடம் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அவர்களது கருத்துக்கும், அணிக்கும் சம்பந்தமில்லை.

இதன் காரணமாக அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஒரு அணியாக, ஆல்-ரவுண்டர் பாண்ட்யா ஆட முடியாமல் போனாலும் அதனால் எங்களுக்கு நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. அணியின் நம்பிக்கையிலும் பாதிப்பு இருக்காது. ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர் இருப்பதால் தேவைப்பட்டால் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு அணியாக சரியான நிலையில் உள்ளோம். இவ்வாறு கோலி கூறினார்.

ஓய்வு காலத்திற்கு பிறகோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியம் தடையை தளர்த்தினாலோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆடுவது குறித்து பரிசீலனை செய்வீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கோலி, ஓய்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், மீண்டும் பேட்டுடன் களம் திரும்ப மாட்டேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com