

துபாய்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
துபாயில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பெர்முடா- பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெர்முடா 17.2 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. பப்புவா அணியின் வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான நார்மன் வானா தனது முதலாவது ஓவரில் எதிரணியின் கேப்டன் டியான் ஸ்டோவெல் (1 ரன்), காமா லிவரோக் (0), டாரெல் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட 11-வது ஹாட்ரிக் இதுவாகும். இந்த எளிய இலக்கை பப்புவா அணி 10.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.