

வதோதரா,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜம்மு - காஷ்மீர் அணியின் கேப்டன் பாரஸ் டோக்ரா படைத்துள்ளார்.
வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் பரோடா அணிக்கு எதிராகத் தொடங்கிய ரஞ்சி கோப்பைப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் பாரஸ் டோக்ரா இந்த சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் பாரஸ் டோக்ரா, 2012-13 ரஞ்சி கோப்பை சீசனில் இமாச்சலப் பிரதேச அணிக்காக விளையாடினார். அப்போது 8 போட்டிகளில் 5 சதங்களை விளாசினார். இதில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்ததும் அடங்கும்.
2013-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா ஏ அணியில் பாரஸ் டோக்ரா இடம்பெற்றிருந்தார்.
2015-16 ரஞ்சி கோப்பை சீசனில் திரிபுரா மற்றும் சர்வீசஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டைச் சதங்களை அடித்தார். அவை அவரது 6-வது மற்றும் 7-வது இரட்டை சதங்களாக அமைந்தன. அந்தச் சீசனில் 78.11 சராசரியுடன் 703 ரன்களைக் குவித்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட பாரஸ் டோக்ரா, ஐ.பி.எல். தொடரிலும் விளையாடியுள்ளார். 2010-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் பங்கேற்றார்.
பின்னர் 2012-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காகவும், 2013-ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். 2016-ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் குஜராத் லயன்ஸ் அணியாலும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரஞ்சி கோப்பையில் 150 போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் தனது நீண்டகால பயணத்தில் பாரஸ் டோக்ரா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.