பட்டோடி கோப்பை பெயர் மாற்றம் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனான 'பட்டோடி' பெயரில் கோப்பை வழங்கப்பட்டு வந்தது.

இதனை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு பி.சி.சி.ஐ.-யும் ஒப்புக்கொண்டது. அதன்படி இனி வரும் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' என்ற பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு 'பட்டோடி' பெயரில் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பட்டோடி கோப்பை பெயர் மாற்றம் குறித்து, சச்சின் டெண்டுல்கர் சில தகவல்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு 'பட்டோடி கோப்பை' என்ற பெயரை மாற்றி ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என பெயர் வைக்கப்போவதாக முடிவு செய்யப்பட்டதும் நான் முதலில் அழைத்தது பட்டோடியின் குடும்பத்தினரைத்தான்.

அவர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்து, பட்டோடியின் பெயர் இதில் நீடித்து நிலைக்க என்னால் முடிந்ததை செய்கிறேன் எனச் சொன்னேன். அதற்குப் பின் ஜெய்ஷா, பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் என்னுடைய யோசனையை கூறினேன். அவர்களும் பட்டோடியின் புகழ் நிலைத்து நிற்க அதனை மனதார ஏற்றுக்கொண்டனர்.

அதன் விளைவாக, கோப்பை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com