உமர் அக்மல் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
உமர் அக்மல் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை
Published on

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீதான லஞ்ச குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை, அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது எனக்கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனினும், அக்மல் மீதான குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கவில்லை.

அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அணியான குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி, மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

29 -வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com