ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216/7 ரன்கள் குவிப்பு

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்து உள்ளது.
ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216/7 ரன்கள் குவிப்பு
Published on

சார்ஜா,

13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் விளையாடின.

இதில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் வெற்றி கணக்குடன் தனது போட்டியை தொடங்கியுள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றியை தொடரும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து சஹார் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஸ்மித் நிலைத்து ஆடி அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இவற்றில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் விளையாடிய சாம்சன் அரை சதம் விளாசினார். அவர் 74 ரன்கள் (32 பந்துகள் 1 பவுண்டரி, 9 சிக்சர்கள்) அடித்து அணிக்கு வலு சேர்த்துள்ளார். நகிடி பந்து வீச்சில் சஹாரிடம் கேட்ச் கொடுத்து சாம்சன் ஆட்டமிழந்து உள்ளார்.

அவரை தொடர்ந்து வந்த மில்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரன்அவுட் முறையில் வெளியேறினார். எனினும், கேப்டன் ஸ்மித் சிறந்த முறையில் ஆடி 69 ரன்கள் (47 பந்துகள் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

இதன்பின்னர் உத்தப்பா (5), ராகுல் தூவட்டியா (10), ரியன் பராக் (6) ரன்களில் ஆட்டமிழந்தனர். கரண் (10), ஆர்ச்சர் (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் வலுவான நிலையில் உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com