

லண்டன்,
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்த போட்டி திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டியினர் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் மூன்று விதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, திட்டமிட்ட தேதியில் நடத்துவது. 2-வது, அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்துவது.
3-வது 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பது. இவற்றில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கு உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டால், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பு உருவாகும்.
இதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிசுற்று 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2022-ம் ஆண்டுக்கு தள்ளிபோகும் என்று தெரிகிறது.