பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம்.. முதல் இன்னிங்சில் தமிழகம் 512 ரன்களில் டிக்ளேர்

image courtesy:twitter/@TNCACricket
ரஞ்சி கோப்பையில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
பெங்களூரு,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 2-வது லீக் ஆட்டம் நேற்று தொடங்கியது.
இதில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆதிஷ் 14 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால், விமல் குமாருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடியதுடன் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டனர். ஸ்கோர் 337 ரன்னாக உயர்ந்த போது, முதல் தர கிரிக்கெட்டில் முதலாவது சதத்தை அடித்த விமல் குமார் 189 ரன்னில் அவுட்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 307 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆந்த்ரே சித்தார்த் வந்தார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 399 ரன்கள் அடித்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், ஆந்த்ரே சித்தார்த் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதம் அடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்களுடனும், இந்திரஜித் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகாலாந்து அணி தொடக்கத்தில் தமிழக வீரர் குர்ஜப்னீத் சிங்கின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். இருப்பினும் தேகா நிஸ்சல் - யுகந்தர் சிங் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது.
2-வது நாள் முடிவில் நாகாலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்துள்ளது. தேகா நிஸ்சல் 80 ரன்களுடனும், யுகந்தர் சிங் 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தராப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






