பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்... சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்


பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்... சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
x
தினத்தந்தி 8 April 2025 9:11 PM IST (Updated: 8 April 2025 9:58 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரியன்ஷ் ஆர்யா 103 ரன்கள் அடித்தார்.

முல்லான்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முல்லான்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார்.

ஆனால் சென்னை பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். பஞ்சாப் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான பிரம்சிம்ரன் சிங் ரன் எதுவுமின்றியும், ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும், வதேரா 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இருப்பினும் விக்கெட் விழுவதை நினைத்து கவலைப்படாத பிரியன்ஷ் ஆர்யா சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஷசாங்க் சிங் அவருக்கு ஒரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். வெறும் 39 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 42 பந்துகளை எதிர்கொண்ட பிரியன்ஷ் 103 ரன்கள் (9 சிக்சர், 7 பவுண்டரி) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் ஷசாங்க் சிங் - மார்கோ ஜான்சன் இணை அதிரடியாக விளையாட பஞ்சாப் 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்துள்ளது. ஷசாங்க் சிங் 52 ரன்களுடனும், மார்கோ ஜான்சன் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் அஸ்வின் மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை களமிறங்க உள்ளது.

1 More update

Next Story