புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக லெவன்- அரியானா ஆட்டம் மழையால் பாதிப்பு

கோப்புப்படம்
புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 3 நாள் நடக்கும் இந்த லீக் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் 90 ஓவர்களாகவும், 2-வது இன்னிங்ஸ் 45 ஓவர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோஜன் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் மராட்டியத்துக்கு எதிரான ஆட்டத்தில் (ஏ பிரிவு) முதலில் பேட் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி முதல் நாளில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 384 ரன்கள் எடுத்தது. 2-வது நாளான நேற்று மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தனது முதல் இன்னிங்சை ஆடிய மராட்டிய அணி நேற்றை ஆட்டநேரம் முடிவில் 24 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பரோடா அணி தனது முதல் இன்னிங்சில் 176 ரன்னில் அடங்கியது. இதைத் தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று தொடர்ந்து பேட் செய்த அந்த அணி 280 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கம்ரான் இக்பால் 81 ரன்னும், முசைப் அஜாஸ் 80 ரன்னும் எடுத்தனர். பரோடா தரப்பில் ஆர்யன் சாவ்டா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 104 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பரோடா ஆட்டநேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்துள்ளது.
பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் (சி பிரிவு) மும்பை அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய அந்த அணி 266 ரன்னில் அடங்கியது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- அரியானா (சி பிரிவு) இடையிலான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.






