முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள்...வி.வி.எஸ். லட்சுமணனை முந்திய புஜாரா..!

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: @BCCIdomestic
Image Courtesy: @BCCIdomestic
Published on

ராஜ்கோட்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் ராஜ்கோட்டில் நடக்கும் ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 406 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (157 ரன்), பிரேராக் மன்கட் (23 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

3-வது நாளான நேற்றும் சவுராஷ்டிராவின் ரன்வேட்டை நீடித்தது. அபாரமாக ஆடிய புஜாரா முதல்தர கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் உள்ளூர் போட்டியை சேர்த்து) தனது 17-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். ரஞ்சி கிரிக்கெட்டில் அவரது 8-வது இரட்டை சதமாக பதிவானது. சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 156 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. புஜாரா 243 ரன்களுடனும், பிரேராக் மன்கட் 104 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

436 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க ஜார்கண்ட் இன்னும் 296 ரன்கள் எடுத்தாக வேண்டும். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

இந்நிலையில் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் வி.வி.எஸ்.லட்சுமணனை (19,730 ரன்) பின்னுக்கு தள்ளி புஜாரா (19,813 ரன்) 4ம் இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் சுனில் கவாஸ்கரும் (25,834 ரன்), 2ம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் (25,396 ரன்), 3வது இடத்தில் ராகுல் டிராவிட்டும் (23,794 ரன்) உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com