தந்தையை இழந்த சோகத்திலும் ‘மன்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது’ பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு

‘தந்தை இறந்த துயரத்திலும் மன்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது’ என்று பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.
தந்தையை இழந்த சோகத்திலும் ‘மன்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது’ பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு
Published on

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை வசப்படுத்தியது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 150 ரன் இலக்கை பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கிறிஸ் கெய்ல் (51 ரன்கள், 29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கடந்த வாரம் தனது தந்தை மறைந்தாலும் நாடு திரும்பாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு தொடர்ந்து விளையாடி வரும் பஞ்சாப் வீரர் மன்தீப் சிங் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்) நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், குடும்பத்தினரை விட்டு வெளியூரில் இருக்கும் போது நமக்கு நெருக்கமானவர்களை இழக்க நேரிடுவதுடன், அந்த துயரத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போவது மிகவும் வேதனைக்குரியதாகும். அந்த மாதிரியான இக்கட்டான நிலையிலும் மன்தீப் சிங் விளையாடி வருகிறார். அவர் காட்டிய மனஉறுதி அணியில் உள்ள மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் இந்த ஆட்டத்தில் ஆடிய விதம் எல்லோரையும் உணர்ச்சி மயமாக்கியது. கடினமான தருணத்திலும் பொறுப்பை ஏற்று விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து அவருக்கும், அவருடைய தந்தைக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார்.

முதல் கட்ட ஆட்டங்களில் கெய்லை ஆட வைக்காதது கடினமான முடிவு தான். ஏனெனில் அவர் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். ரன் குவிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர். நேர்மறையான எண்ணம் கொண்ட அனுபவசாலியான அவரை போன்றவர்கள் அணியில் இருப்பது சிறப்பானதாகும். என்றார்.

மன்தீப் சிங் உருக்கம்

அரைசதம் அடித்ததும் வானத்தை நோக்கியபடி அதனை தனது தந்தைக்கு அர்ப்பணித்த பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் கூறுகையில், ஒவ்வொரு போட்டியிலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி சொல்வார். அவருடைய விருப்பத்தை இந்த ஆட்டத்தில் நான் நிறைவேற்றி இருக்கிறேன். களம் இறங்குவதற்கு முன்பு நான் லோகேஷ் ராகுலிடம் பேசுகையில் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். நான் சில பந்துகளை வீணடித்தாலும் கூட, நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன் என்று கூறினேன். கடைசி வரை அவுட் ஆகாமல் வெற்றிகரமாக முடித்து கொடுத்து இருப்பதால் எனது தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com