

மும்பை,
ஐ.பி.எல். தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் எந்த அணியும் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்யவில்லை.
இந்த நிலையில், தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும், சமீபத்திய தொடர் தோல்விகள் அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறி இருப்பதாவது;
"தொடர் தோல்வி என்பது ஜீரணிக்க கடினமான விஷயம். ஆனால் நான் இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனென்றால் இது ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தது. ஒரு கட்டத்தில், நாங்கள் சுமார் 170 முதல் 180 ரன்கள் எடுப்போம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அஸ்மத் சிறப்பாக விளையாக ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் நாங்கள் 200 ரன்கள் எடுத்தோம். மும்பை அணியில் திலக் வர்மா அற்புதமாக விளையாடினார். அவருக்குப் பாராட்டுக்கள்.
எங்களுக்கு அடுத்து வாய்ப்புகள் உள்ளன. பகல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உத்வேகத்துடன் உள்ளேன். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற நாங்கள் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இரண்டு போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது. இரு போட்டிகளிலும் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.