

சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் , குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் , சாய் சுதர்சன் களமிறங்கினர்.
சுதர்சன் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் 39 ரன்னிலும், பட்லர் 38 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளேன் பிலிப்ஸ் 25 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் விஜய்குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரயான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். ஆர்யா 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கூப்பர் கான்லியுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த நேஹல் வதேரா (3 ரன்கள்), ஷசாங் சிங் (4 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (0 ரன்), மார்கோ யான்சென் (9 ரன்கள்) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் மறுமுனையில் கூப்பர் கான்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 165 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்சை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கூப்பர் கான்லி 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். குஜராத் தரப்பில் அந்த அணியின் பிரசாந்த் கிஷோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.