

சென்னை,
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க டி20 அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றநிலையில், சமீபத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து, 222 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கினை துரத்திய தென்னாப்பிரிக்கா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் குயின்டன் டி காக் 49 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 115 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறிப்பிட்ட ஒரு முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டி அவரது நூறாவது இன்னிங்ஸ்சாக அமைந்தது. இப்படி 100-ஆவது இன்னிங்சில் விளையாடிய அவர் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் நூறாவது இன்னிங்சில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.