

புனே
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மேலும் ஒரு பவுண்டரி சேர்த்த நிலையில் ஸ்டார்க் (61) அஸ்வின் சுழலில் சிக்கினார். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் வெறும் 5 பந்துகள் நீடித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்டில் அஸ்வின் மொத்தமாக 64 (நியூசிலாந்து 27 + இங்கிலாந்து 28 +வங்கதேசம் 6 + ஆஸ்திரேலியா 3) விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் கபில் தேவின் 37 ஆண்டு கால சாதனையை அஸ்வின் தகர்த்தெறிந்தார்.
கடந்த 1979-80ல் இந்தியாவில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மொத்தமாக 63 விக்கெட் கைப்பற்றியதே, ஒரு சீசனில் அதிகவிக்கெட் பவுலருக்கான சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் தற்போது முறியடித்துள்ளார். தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் அஸ்வினின் விக்கெட் வேட்டை தொடரலாம்.