ஐ.எல்.டி 20 ஓவர் கிரிக்கெட்: ஏலத்தில் விலை போகாத அஸ்வின்

கோப்புப்படம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் மாதம் நடக்கும் 4-வது ஐ.எல்.டி 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாட அஸ்வின் விரும்பினார்.
துபாய்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஐ.பி.எல். போட்டிக்கும் முழுக்கு போட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுபவசாலியான 39 வயதான அஸ்வின் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் கிரிக்கெட்டில் (டிசம்பர் 14-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை) சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையே, அஸ்வின் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் மாதம் நடக்கும் 4-வது ஐ.எல்.டி 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாட விரும்பினார். இதற்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடியே 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வீரர்களை விட இவருக்கு தான் அதிக அடிப்படை விலை கொடுக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஏலத்தில் துரதிர்ஷ்டவசமாக அவரை எந்த அணியும் வாங்கவில்லை. விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் அவர் வைக்கப்பட்டார். அவரது அடிப்படை தொகை ரொம்ப அதிகம். மேலும் அவர் பாதியில் பிக்பாஷ் போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இது போன்ற காரணங்களால் அவரை எந்த அணியும் சீண்டவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ரத்து செய்த போதிலும் பஹர் ஜமான், நசீம் ஷா, ஹசன் நவாஸ் போன்ற பாகிஸ்தான் வீரர்களை வைபர்ஸ் அணி தைரியமாக ஏலத்தில் எடுத்துள்ளது. அஸ்வின் முதலில், பிக்பாஷ் கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஆட்டங்களில் மட்டுமே விளையாட திட்டமிட்டிருந்தார். இப்போது ஐ.எல்.டி. ஏலத்தில் விலை போகாததால் பிக்பாஷ் போட்டியில் முழுமையாக விளையாட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.






