147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரபாடா


147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரபாடா
x

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா இந்த சாதனையை படைத்துள்ளார்.

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தை விட 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கைல் வெர்ரியன்னே 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்த இன்னிங்சில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 300 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ரபாடா - 11817 பந்துகள்

2. வாக்கர் யூனிஸ் - 12602 பந்துகள்

3. டேல் ஸ்டெயின் - 12605 பந்துகள்

4. ஆலன் டோனால்டு - 13672 பந்துகள்

1 More update

Next Story