நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறிய ராஜஸ்தான்


நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறிய ராஜஸ்தான்
x

இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3ல் மட்டுமே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டியில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின.

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ரையான் ரிக்கெல்டனும், ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 7 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். உடனடியாக டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்பு லைனுக்கு வெளியே பிட்ச் ஆவது தெரிந்ததால் ரோகித் சர்மா மறுவாழ்வு பெற்றார்.

அதைத் தொடர்ந்து இருவரும் ராஜஸ்தானின் பந்து வீச்சை புரட்டியெடுத்தனர். 'பவர்-பிளே' யான முதல் 6 ஓவர்களில் 58 ரன்கள் திரட்டிய இவர்களை அவ்வளவு எளிதில் எதிரணி பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் அரைசதங்களையும் நிறைவு செய்தனர். மும்பை வான்கடே ஸ்டேடியத்திற்கு வெளியே மும்பையின் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் உருவாக்கியது 2020-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

அணியின் ஸ்கோர் 116-ஆக உயர்ந்த போது (11.5 ஓவர்) ரிக்கெல்டன் 61 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) தீக்ஷனாவின் சுழலில் போல்டு ஆனார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா 53 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். முன்னதாக ரோகித் சர்மா மும்பை அணிக்காக 6 ஆயிரம் ரன்களை கடந்தார்.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து ராஜஸ்தானின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். பசல்ஹக் பரூக்கியின் ஒரே ஓவரில், பாண்ட்யா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். சூர்யகுமாரும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட ஸ்கோர் 200-ஐ சுலபமாக கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (23 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தலா 48 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முந்தைய ஆட்டத்தில் 35 பந்தில் சதம் அடித்து வரலாறு படைத்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்த முறை முதல் ஓவரிலேயே கேட்ச்சாகி டக்-அவுட் ஆகிப் போனார். இதனால் அவரது மின்னல் வேக ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் டிரென்ட் பவுல்ட் பந்தில் போல்டு ஆனார். இதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரே ஓவரில் கேப்டன் ரியான் பராக் (16 ரன்), ஹெட்மயர் (0) ஆகியோரை காலி செய்தார். இந்த வீழ்ச்சியில் இருந்து அவர்களால் நிமிரவே முடியவில்லை. 8-வது வரிசையில் ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 30 ரன்கள் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இல்லாவிட்டால் அந்த அணி இரட்டை படையிலேயே அடங்கியிருக்கும்.

ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

11-வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 7-வது வெற்றியாகும். இதில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றதும் அடங்கும். 14 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

அதே சமயம் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தானுக்கு இது 8-வது தோல்வியாகும். இத்துடன் ராஜஸ்தானின் 'பிளே-ஆப்' கனவு சிதைந்தது. அந்த அணி லீக் சுற்றுடன் நடையை கட்டுவது இது 10-வது முறையாகும்.

இதன்படி நடப்பு தொடரில் சென்னையைத் தொடர்ந்து 2-வது அணியாக ராஜஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது.

1 More update

Next Story