ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

image courtesy:PTI
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளது.
ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் அடித்தனர். பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களும், ஜெய்ஸ்வால் 70 ரன்களும் அடித்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் 15.5 ஓவர்களில் 210 ரன்கள் இலக்கை சேசிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் 200+ ரன்களை இலக்கை வேகமாக கடந்த அணி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக 16 ஓவர்களில் 200+ ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது.
அந்த பட்டியல்:
1. ராஜஸ்தான் ராயல்ஸ் - 15.5 ஓவர்கள்
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 16 ஓவர்கள்
3. மும்பை இந்தியன்ஸ் - 16.3 ஓவர்கள்
4. டெல்லி கேப்பிடல்ஸ் - 17.3 ஓவர்கள்
5. மும்பை இந்தியன்ஸ் - 18 ஓவர்கள்






