போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணி மேலாளருக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், டக்-அவுட்டில் அமர்ந்தவாறு தனது மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தார்.
போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணி மேலாளருக்கு அபராதம்
Published on

சென்னை,

கடந்த 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 11-வது ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், அணியின் டக்-அவுட்டில் அமர்ந்தவாறு தனது மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் அணியின் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த செல்போன் திரையை எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தரிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரோமி பிந்தருக்கு ரூ. 1 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி அணியின் டக்-அவுட் பகுதியில் வீரர்கள், அணி ஊழியர்கள் என யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com