

புதுடெல்லி,
லோதா கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டியானா எடுல்ஜி, அடிப்படை மேம்பாட்டு நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் விக்ரம் லிமாயே, வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா ஆகியோரை கொண்ட நிர்வாக கமிட்டியை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ந் தேதி நியமித்தது. தற்போது வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் வாரிய பணிகளை கவனித்து வருகிறது.
இந்த நிலையில், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராமசந்திர குஹா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காக பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்திலும் தன்னை விடுவிக்கும் படி மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்த நிலையில், ராஜினாமா கடிதத்தில் பல்வேறு அதிருப்தியை ராமச்சந்திர குஹா வெளியிட்டுள்ளார். ராமச்சந்திர குஹா இது குறித்து கூறியிருப்பதாவது:- டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தோனிக்கு ஊதிய ஒப்பந்தத்தில் ஏ-கிரேடு வழங்கப்பட்டது ஏன்?இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு சரியான முறையில் கையாளப்படவில்லை. கவாஸ்கருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்பாக பணியாற்றுபவர்களுக்கு உள்ள இரட்டை ஆதாய பிரச்சினை உரிய முறையில் கையாளப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.