

மும்பை,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) மும்பையில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்த்ராஜித் 105 ரன்களுடனும், அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3வது நாளான நேற்று தமிழக வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். அஸ்வின் 13 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 21 ரன்னிலும் வெளியேறினாலும், 9வது வரிசையில் களம் புகுந்த ஆல்ரவுண்டர் யோமகேஷ் மும்பை பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். மறுமுனையில் பாபா இந்த்ராஜித் 152 ரன்களில் கேட்ச் ஆனார். யோமகேஷ், சதம் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 142 ஓவர்களில் 450 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ரஹில்ஷா (17 ரன், 104 பந்து), கே.விக்னேஷ் (16 ரன், 23 பந்து) ஆகியோரின் ஒத்துழைப்புடன் முதல்முறையாக சதத்தை ருசித்த யோமகேஷ் 103 ரன்களுடன் (216 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 76 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் என்பதால், இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.