ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே கர்நாடகா 275 ரன்களும், சவுராஷ்டிரா 236 ரன்களும் எடுத்தன. 39 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா அணி 239 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும், புஜாராவும், ஷெல்டன் ஜாக்சனும் நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4-வது நாள் ஆட்டம் முடிவில் சவுராஷ்டிரா அணி 74 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்து இருந்தது. 49-வது முதல் தர சதத்தை அடித்த புஜாரா 108 ரன்களுடனும், ஷெல்டன் ஜாக்சன் 90 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேலும் 55 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் புஜாரா, ஷெல்டன் ஜாக்சன் ஆட்டத்தை தொடர்ந்தனர். சதத்தை எட்டிய ஷெல்டன் ஜாக்சன் 100 ரன்னில் வினய்குமார் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த வசவதா 12 ரன்னில் அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய புஜாரா அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 91.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. புஜாரா 266 பந்துகளில் 17 பவுண்டரியுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 3-வது முறையாகும்.

இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 3-ந் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com