

புதுடெல்லி,
இந்தியாவில் நடத்தப்படும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டி கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 87 ஆண்டு கால வரலாற்றில் ரஞ்சி கிரிக்கெட் ரத்து செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும். இந்த சீசனுக்கான போட்டியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் தள்ளி வைக்கப்பட்டது. ரஞ்சி கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு. ரஞ்சி போட்டியை நடத்தாமல் புறக்கணித்தால், அது இந்திய கிரிக்கெட்டை பலவீனமாக்கி விடும் என்று முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஞ்சி போட்டியை மீண்டும் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டுகிறது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியை இரண்டு கட்டமாக நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டத்தில் எல்லா லீக் ஆட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். 2-வது பகுதியில் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களை ஜூன் மாதத்தில் நடத்த உள்ளோம்.
ரஞ்சி கிரிக்கெட் எங்களுக்கு மிகவும் கவுரவமிக்க உள்ளூர் போட்டியாகும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் வியப்புக்குரிய திறமையான நிறைய வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே போட்டியின் நலன் கருதி, அதை நடத்துவதற்கு தேவையான எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். என்று கூறியுள்ளார்.
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்கி ஏறக்குறைய ஒரு மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஐ.பி.எல். முடிந்ததும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும்.