ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் குஜராத் அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் குஜராத் அணி உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் குஜராத் அணி
Published on

வல்சாத்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்- கோவா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சாத்தில் நடந்து வருகிறது. இதில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கோவா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இருப்பினும் பாலோ-ஆன் வழங்காமல் 429 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய குஜராத் அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 587 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருக்கிறது.

கட்டாக்கில் நடக்கும் பெங்காலுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் ஒடிசா அணி முதல் இன்னிங்சில் 250 ரன்னில் ஆட்டம் இழந்தது. அடுத்து 82 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது.

ஆந்திராவுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆந்திர அணி 136 ரன்னில் அடங்கியது. 283 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் பேட்டிங் செய்த கர்நாடகா முதல் இன்னிங்சில் 206 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com