ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று ஜம்மு காஷ்மீர் அணி வரலாறு படைத்துள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்
Published on

ஹூப்ளி,

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது. ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 584 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

4-வது நாள் ஆட்ட முடிவில் ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி, 113 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி சமனில் முடிவடைந்தது.

முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் எடுத்துள்ளார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணியே கர்நாடக அணியை விட அதிக ரன்கள் எடுத்திருந்ததால், ஜம்மு காஷ்மீர் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று ஜம்மு காஷ்மீர் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com