ரஞ்சி டிராபி; முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கேரளா

image courtesy: X (Twitter) / @KCAcricket
வரும் 26ம் தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் கேரளா அணி விதர்பாவை சந்திக்கிறது.
அகமதாபாத்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, மும்பை, விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் கடந்த 17ம் தேதி தொடங்கின. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கேரளா - குஜராத் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரளா தனது முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. கேரளா தரப்பில் அதிகபட்சமாக அசாரூதின் 177 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். குஜராத் தரப்பில் நக்வாஸ்வாலா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் 455 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பஞ்சல் 148 ரன்கள் எடுத்தார். கேரளா தரப்பில் ஜலஜ் சக்சேனா, சர்வாடே ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 2 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய கேரளா அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துகொள்ளப்பட்டது.
இதன் மூலம் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் கேரளா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 26ம் தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் கேரளா அணி விதர்பாவை சந்திக்கிறது. இறுதிப்போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






