ரஞ்சி கோப்பை: தமிழக அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆல் அவுட்

image courtesy: twitter/@TNCACricket
தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் உடன் விளையாடி வருகிறது.
ஜாம்ஷெட்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் 7-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.
இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் உடன் விளையாடுகிறது. இதில் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழலில் தமிழக அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷரன்தீப் சிங் 52 ரன்கள் அடித்தார். கேப்டன் இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வெறும் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது அலி 37 ரன்கள் அடித்தார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் தரப்பில் உத்கர்ஷ் சிங் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் அடித்துள்ளது. ஷரன்தீப் சிங் ரன் எதுவுமின்றியும், மனிஷி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






