போக்சோ வழக்கில் கைதாகும் ஆர்.சி.பி. வீரர் ?

யாஷ் தயாள் தரப்பில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் யாஷ் தயாள் மீது உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக யாஷ் தயால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து யாஷ் தயாள் தரப்பில் ஜெய்ப்பூரில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில், யாஷ் தயாளுக்கு முன்ஜாமீன் வழங்க ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு மறுத்துள்ளது.
இந்த கட்டத்தில் ஜாமீன் வழங்கினால் , விசாரணை பாதிக்கப்படும் எனவும் வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் யாஷ் தயாள் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது.






